Monday 28 March 2011

மீண்டும் நான் என் கூட்டுக்குள்ளே

என் மனக் கல்லுடைத்தாய்
என் கூட்டுக்குள் இருந்து
என்னை வெளி இழுத்தாய்
அழகான இந்த காதலை
எனக்கு சொன்னாய்
உடன் -
அதன் வலியையும் சொன்னாய்.....

மீண்டும் நான்
என் கூட்டுக்குள்ளே..

காதலின் இனிமையையும் வலியையும் அறிந்த
முழு மனிதனாய்....

இந்த முறை தனியாய் இல்லை
உன்னையும் என்னோடு
அள்ளி வந்தேன்
நினைவிலும் நிஜத்திலும்...

என் கூடு
மிகவும் அழகானது
என் எண்ணத்தில் உருவானது
நினைப்பது நடக்கும்...

நீயும் என்னுடன்
வேறென்ன வேண்டும்
நீயும் நானும் இந்த கூட்டுக்குள்ளே

கொஞ்சம் ஊடல்... கொஞ்சம் சிணுங்கல்

கொஞ்சம் ஊடல் 
கொஞ்சம் சிணுங்கல்
உன் அருகாமை தந்த சுகத்தில் 
சில நாள் 
அவளை - 
என் கடல் தோழியை 
பார்க்க செல்லவில்லை 
இன்று 
உன் நினைவின் தவிப்பை தணிக்க
அவளிடம் போனால் 
கொஞ்சம் ஊடல் 
கொஞ்சம் சிணுங்கல்...

கெஞ்சி கொஞ்சி 
அலைகளோடு ஓடி விளையாடி 
அவள் அருகில் 
கதை பேசி அமர்ந்தேன்....

அன்று நீயும் நானும் 
அமர்ந்த அதே இடத்தில...
ஏதோ ஒரு நினைப்பு
அன்று உன்னை தீண்டிய 
அந்த ஆயிரம் கோடி மணல்களில் 
ஒன்றாவது என்னை தீண்டும் என்று...

ஆனந்த ஆட்டம் போட்டாள் 
இனிதாக இசை படித்தாள்
அந்த நட்சத்திரங்கள்கூட 
உன்னை தேடி வந்து 
கண் சிமிட்டின 

என்னை முழுதும் தெரிந்தவள்
என் கடல் தோழி
என் வலி உணர்ந்தாள் போலும்....
தன்னுள் தேக்கி வைத்த 
உன் வாசத்தை என்னுள் வீசினாள்...
அன்று அவள் வரைந்த
உன் அழகு உருவத்தை 
என்னருகில் இருத்தினாள்...
என் மேல் நீ கொண்ட காதலை
அவளிடம் சொன்னாயோ 
இன்று அதன் ஆழத்தை 
என்னிடம் வியந்து சொன்னாள் -
நானும் நன்றாய் உணர்ந்து கொண்டேன்...

உன்னிடம் 
என் காதலை 
சேர்க்கச் சொன்னேன் 
இரு வருகிறேன் என்று 
தென்றலில் ஏந்தி விரைந்தாள் 
நானும் காத்திருந்தேன் - வெகுநேரம்...
ஓடோடி வந்தாள்
வெள்ளை முந்தானை காற்றில் அலைபாய 
பெருமூச்சு விட்டபடி - 
உன் காதோரம் அவள் சொன்ன என் காதலுக்கு 
நீ தந்த காதல் முத்தத்தை 
அதன் ஈரம் காயாமல் 
சுகமான வெப்பம் குறையாமல் 
தன்னுள்ளே இருத்தி 
ஓடோடி வந்து
என் கன்னம் சேர்த்தாள்...

என் இனிய காதலியே 
உன்னை நான்
காதலிக்கிறேன்...

இந்த காதல் படுத்தும் பாடு

இந்த காதல் 
படுத்தும் பாடு
உன் ஒரு வார்த்தைக்கு
ஏங்குகிறேன்...
மனம் பிசைகிறது...
நீ இருக்கிறாய்
ஆனால் நீ இல்லை....
நெஞ்சுக்குள் உயிர் உருண்டை உருள்கிறது...
காலுக்கு கீழே பூமி நழுவுகிறது...
இத்தனையும் இல்லாமல் போனது 
உன்னை பார்த்து 
எல்லாமே இன்பமாய் மாறிப் போனது 
அன்பே 
என் காதலே 
உன் ஒரு வார்த்தையாலே

Sunday 27 March 2011

என்ன கொடுத்தாய் எனக்குள்

உன் அருகாமை
உன் காதல்
உன் நேசம் 
நீ இல்லாமல் கூட நான் உணர்கிறேன்...

உன் தீண்டல்
உன் குரல்
உன் வாசம் 
உன் உணர்வு 
என்னிடமே இருக்கிறது ...

ஏதோ ஒரு பாதுகாப்பு 
என் தாயாகிறாய் ...
ஏதோ ஒரு இன்பம் 
என் காதலியாகிறாய்...
ஏதோ ஒரு அருகாமை 
என் தோழியாகிறாய்...

என்ன கொடுத்தாய்
எனக்குள்....

நீ இல்லாமல் போனாலும் 
உன் முத்தத்தின் ஈரம்
உன் அணைப்பின் கதகதப்பு 
என்றென்றும் என்னை 
உயிரோடு வைத்திருக்கும் 

Friday 25 March 2011

வெள்ளை பட்டாம்பூச்சி

அந்த வெள்ளை பட்டாம்பூச்சி
தனியாய்
இத்துனை கூட்டத்தினூடே 
அழகாய் பறக்கிறதே.... 
ஒவ்வொரு தோளாய் உடகார்ந்து 
சோர்வை கழிக்கிறதே...
தனது வனம் எங்கென்று 
என் கன்னம்  தீண்டி கேட்கிறதே.... 
அழைத்துச் செல்கிறேன்
வா வென்றால் 
இந்த சிறையே போதுமென்று 
என் கைக்குள் வர மறுக்கின்றதே

என்னவளே இனியவளே

என்னவளே 
இனியவளே
என்னுள்ளே இருப்பவளே
நானாகிப் போனவளே 
என் அன்பே
என் காதலாகிப் போன காதலியே
என் கண்ணில் விழுந்த கண்மணியே 
என் இதயம்  நிறைந்த இதயமே 
என்னை முழுதாய் கொண்ட ராட்ச்சசியே 
என் ரசனையே
என்னை தீண்டும் தென்றலே 
என் மனம் நனைக்கும் மழையே 
என்னை குளிர்விக்கும் நிலவே 
என் உறவே 
என் நட்பே 
என் முகமே 
என் எண்ணமே 
என் இயக்கமே 
என்னுள் உருகிப் போன உயிரே.....
என்னுள் சுகமாய் இருக்கிறாயா???

Saturday 19 March 2011

எனக்கும் கடலுக்கும்

எனக்கும் கடலுக்கும் நிறைய பந்தம் உண்டு 
இது வரை 
உன் கை கோர்த்து அவள் முன் அமர்திருக்கும் இந்த நிமிடம் யோசிக்கிறேன்
கடலுக்கும் எனக்குமான உறவை பற்றி எண்ணுகிறேன்...

உன்னை தவிர
யாரையும் அவளுக்கு நான் அறிமுகம் செய்து வைத்தது இல்லை 
கை பிடித்து இவள் என்னவள் என்று...
அவளுக்கும் எனக்குமிடையே யாரையும் அனுமதித்ததும் இல்லை 

வாழ்ந்ததும் 
வாழ்வதும் 
கடல் உள்ள ஊரில்தான் 
எத்தனை நாள் அவளிடம் சென்றிருப்பேன்
இரவின் இருளில் எத்தனை சோகங்களை 
அவளிடம் அழுதிருப்பேன்...
அவளும் உப்புக் காற்றால் 
சலிக்காமல் என் கண்ணீர் துடைத்திருப்பாள்

நான் அத்தனை முறை அழுது வேறு யாரும் பார்த்திருக்க முடியாது

அவளுள் வரட்டுமா என்று கேட்ட போதெல்லாம் 
என்னை எனக்கு உணர்த்துவாள் 
நான் யாருக்கெல்லாம் வேண்டும்
என் கடமைகள் என்ன
இப்படி பல சொல்லி என்னை தேற்றுவாள்

இரவின் இருளில் என்னை மகிழ்விக்க அவள் செய்யும் கோலங்கள் பலப்பல 
அந்த நட்சத்திரங்களை கட்டி இழுத்து வந்து
கண்சிமிட்டி காற்றில் நடனமாட விடுவாள்
நிலவை தூக்கி வந்து 
கதைகள் சொல்ல வைப்பாள் 
தென்றல் வீசி
என்னை தூங்க வைப்பாள் 
அந்த தென்றலில் 
எனக்கு பிடித்த இசையையும் தவழவிடுவாள் 
அலைகள் கொண்டு 
என்னை தொட்டு விளையாடுவாள் 

இன்று உன்னோடு 
அவள் முன்
நீ நானானதால்
அவளுக்கும் சந்தோசம் கொள்ளவில்லை 
அலைகளால் சாரல் தெளித்து....

என் மேல் என்னதான் கோவமோ

இந்த இரவுக்கு 
என் மேல் என்னதான் கோவமோ
உன் பிரிவின் நினைவுகளை 
மீண்டும் மீண்டும் 
என் மீது மோதவிட்டு 
என்னை இம்சிக்கிறது....
இதை பார்த்து 
கண்சிமிட்டி சிரிக்கின்றன
வானத்து நட்சத்திரங்கள்...
தென்றலுக்கு மட்டும்தான்
என் மீது கொஞ்சம் கரிசனம் 
இதமாய் வீசுகையில் 
உன் காதலின் சுகந்தத்தை சொல்லி 
நீயாய் அணைத்துக்கொள்கிறது....

Thursday 17 March 2011

உன்னையே பார்க்க சொல்கிறாய்

நான் எங்கிருந்தாலும்
யாரோடு இருந்தாலும்
என்ன செய்து கொண்டிருந்தாலும்
நீ என் எதிரில் இருக்கிறாய் 
உன்னையே பார்க்க சொல்கிறாய் 
உன்னிடம் எனக்கு பிடித்த 
கண் சிமிட்டலை செய்கிறாய்...

காதலின் வலியையும்

எங்கிருந்து வந்தாய்
எதற்கோ வந்தாய்
உலகமே என் காலடியில் 
இதுவரை இல்லாத இன்பம் 
காதலின் இன்பம் அறியவைத்தாய்
இது என்ன விட்டில் பூச்சி வாழ்க்கை
இத்தனை சீக்கிரத்தில் 
காதலின் வலியையும்
உணர வைத்தாய்..

Tuesday 15 March 2011

அழகாய் அமைதி கொள் அன்பே

நீதானே இது
இத்துனை உறுதி 
என் அன்பை அல்ல 
என் அரவணைப்பை அல்ல
என் உதவதியை மட்டும் 
வார்த்தையில் கூட 
வேண்டாம் என்று 
தள்ளி வைக்கும் 
அந்த உறுதி....

ஆனால் நான் இப்படித்தான் 
உறங்கும் நேரத்திலாவது 
உன் கவலைகளை 
உன் பொறுப்புகளை
என் மார்பில் 
நீ சாய்ந்திருக்கும் போது 
உன்னிடமிருந்து பிடுங்கி 
நான் சுமந்து கொள்வேன்....
நிம்மதியாய் உறங்கடி அன்பே...
நான் சந்தோஷிக்கவேனும்
அழகாய் அமைதி கொள் அன்பே...

Monday 14 March 2011

ஒரு முத்தத்தால் மருந்திடுகின்றாய்

போய் வரட்டுமா...
என்று நீ சொல்லும் போதெல்லாம் 
என் மனம் வலிக்கிறது 

என்னோடு நீ இருக்கும் தருணங்கள் 
எனக்கு சந்தோஷ நிமிடங்கள் 

நீ என்னோடுதான் இருக்கின்றாய்
இது எனக்கும் தெரியும் 
இருந்தும் அந்த சிறு பிரிவுகள் 
எனக்கு நீ அதை சொல்லும் போதே 
என் மனதில் ஒரு வலி...
இதயம் கனத்துவிடுகிறது 
என் செய்வேன் 
என் இனிய காதலியே...

ஒரு முத்தத்தால் மருந்திடுகின்றாய் 
ஆனால் 
நீ இல்லாத தருணங்களில்
மீண்டும் வலிக்கிறதே...
என் செய்வேன் 
என் இனிய காதலியே...

என்னிடம் சொல்லிவிடு

சோகம் ஏனடி அன்பே 
மனதில் கொள்ளாதே 
என்னிடம் சொல்லிவிடு...

உனக்காக மட்டும் தானடி இங்கே நான்
உன் மனதின் வாசலிலேயே காத்திருக்கிறேன்
சோர்வு உன்னை தீண்டும் போது எல்லாம் 
உன்னை தாங்கிக் கொள்ள 
கவலை கொள்ளாதே 
உனக்காகவே 
நீ விரும்பும் வடிவில் -
நட்பாய், காதலாய், தந்தையாய், தாயாய், சகோதரனாய், பிள்ளையாய், 
உன்னோடு உனக்காகவே இருப்பேன்....
நீ சொல்ல வேண்டாம் 
உன்னை எனக்கு தெரியும் 

நீ அழுதால் 
நான் தடுக்கப் போவதில்லை 
உன் மனதின் பாரம் குறையும் வரை அழுதுவிடு...
நீ முகம் புதைத்து அழ 
மடி கொடுத்து 
உன் தாயாக உன் தலை கோத
உனக்காக நான்.....

Thursday 10 March 2011

அப்படியே நின்று விடாதா

இந்த தருணம் 
அப்படியே நின்று விடாதா...
நீ என் தோளில்
தலை சாய்த்து 
என் கைகள் பற்றி 
காற்றோடு கதைகள் பேசி இருந்த நேரம்...
கடலுக்கு முகம் காட்டி...
நிலவோடு உறவு பேசி இருந்த நேரம்.....
அந்த தருணம்
அப்படியே நின்று விடாதா??

என்னையும் கலஞனாக்கும்

நீ படிப்பதாய் இருந்தால்
நீ ரசிப்பதாய் இருந்தால்
என் காதலை
நான் உன் மேல் கொண்ட காதலை 
கவிதையாய் என்ன
காவியமாகவே தீட்டுவேன்...
காளிதாசனும் கம்பனும் 
தோற்று போவார்கள்...
உன் காதலும் 
உன் காவிய அழகும்
என்னையும் கலஞனாக்கும்.....

Wednesday 9 March 2011

இதுவரை இப்படி இருந்ததில்லை

இதுவரை இப்படி இருந்ததில்லை...

ஏனோ உன் நினைவுகள்
அலை அலையாய் 
வந்து கொண்டே இருக்கின்றன...

ஏதேதோ ஏக்கம் என்னுள்ளே 
அன்பே அத்தனையும் உன்னுள்ளும் இருக்குமில்லையா??
என்னை சொல்ல உன்னைத்தான் தேடுவேன்....
நீ உன்னை யாரிடம் கூறுவாய்...

ஒரு பெண்ணாய் 
ஒரு சக மனிதனாய் 
நீ என்னுள் உயர்ந்து நிற்கிறாய்...

இத்தனை காதல் உன்மேல் 
நானே நினைக்கவில்லை...

உனக்காக உள்ளே வந்தேன்
உன் சோகம் தீர்கவே உறவு சொன்னேன்...
எல்லாமே மாறிப் போனது...
நீ வேண்டும் எனக்கு இன்று
என் சோகம் தீர்க்கவும் 
நான் கொஞ்சம் சாய்ந்து கொள்ளவும்.

Thursday 3 March 2011

ஏனடி இந்த குழப்பம்

என்னை நீ எங்கே வைத்திருக்கிறாய். நானும் ஒரு குழப்பத்தின் காரணமாகிப் போனேன் என்று நினைக்கையில் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. உன்னுள் வேறொருவன் சற்று சங்கடமாதான் இருக்கிறது. சத்தியமாய் வருத்தமோ கோவமோ இல்லை. உன்னிடம் நான் பொய் சொல்லுவதில்லை. உனக்கென ஒருத்தன் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அதைவிட நிம்மதியாய் இருக்கிறது. நீ சந்தோஷமாய் இருப்பாய் என்ற நினைப்பே அதற்கு காரணம். எனக்கும் நன்றாய் தெரியும் நான் என்றும் உன்னுள் இருப்பேன் என்று. நான் என்றும் இருப்பேன். கவலை வேண்டாம். குழப்பம் வேண்டாம். உன்னை பார்த்துகொண்டே இருப்பேன். உனக்கு சிறு சோர்வென்றாலும் தாங்கிக்கொள்ள நான் இருப்பேன். நீ சொன்னதே போதும் உனது துன்பங்களை புரிந்து கொள்ள. இனி எல்லாம் இன்பமாய் இருக்க வேண்டும். ஒரு துளி கண்ணீர் துளி என்றாலும் தாங்காது நான் ஓடிந்துவிடுவேன். கண்டிப்பாய் விரைந்து இருப்பேன் உன்னை தாங்கி கண்ணீர் துடைக்க. உன்னை அணைத்து கொள்ள நீ புதைந்து கொள்ள இரு கரம் உனக்காகவே நீட்டி இருப்பேன். எல்லாம் நான் கொண்ட காதலுக்காக. நீ எனக்கு தந்த காதலுக்காக. 

உனக்குள் குழப்பத்தை எற்படுத்தினேனா அல்லது ஒரு கேள்வியை விதைத்தேனா?? இது உனக்கு நன்மை செய்யுமா அல்லது கெடுதலா?? எது நடந்தாலும் நான் நீ கேட்டது போல அங்கேயே இருப்பேனடி அன்பே. உனக்காக...முழுதும் உனக்குமாக...எல்லாமுமாக...

காதல் இத்தனை கலவரம் புரியும் என்று எனக்கு தெரியாது. இரவு பகல் கலைத்து போட்டது. துன்பம் என்பதே தெரியாமல் செய்தது.

நான் உன்னோடு இருக்கிறேனா

நான் உன்னோடு இருக்கிறேனா. உனக்கு நான் தேவையானபோது உனக்கு தேவையான வடிவில் நான் உன் அருகில் இருக்கிறேனா? உண்மையில் எப்போதும் உன் அருகில் இருக்கவே விரும்புகிறேன். இது முடியாத போது உன் நினைவிலேனும் உனக்காக உன் அருகில்...உன் கை கோர்த்து இருக்க விரும்புகிறேன்....நீ தலை சாய்க்க...நீ முத்தம் மிட....நீ அயர்ந்து தூங்க என் மார்பு விரித்து....நீ அமைதி கொள்ள உன் தலை கோதி முதுகு வருடிவிட....இதுவரை நான் காதல் உணர்த்து இல்லை. இந்த காதல் என்னையும் பைத்தியமாக்கியது. கற்பனைகள் கட்டவிழ்ந்து ஓடியது. காலங்கள் கடந்து உன்னையும் என்னையும் கண் முன் எனக்கு படம் பிடித்து காட்டியது. 


இந்த நமது உறவில் பிரிவும் வருமோ. வந்தால் என்ன ஆகும் என்று கூட நினைக்க தோன்றவில்லை...பிரிவே வராது என்று என் மனம் சொல்கிறது. 

நான் உன்னை நெருங்கி வருகிறேன்..உனது இதயம் எனதை மிகவும் நெருங்கி விட்டது...எனக்கு இரன்டுக்கும் வித்தியாசமே தெரியவில்லை....