Friday 23 December 2011

நீ புன்னகைக்கு பிறந்தவளோ


நீ வீசிச் செல்லும்
அந்த புன்னகைப் பூக்கள்
என் மீது பட்டுத் தெறிக்கும்
முதல் மழையாய்
என்னை சிலிர்க்க வைக்கிறது...

நீ புன்னகைக்கு பிறந்தவளோ
உன்னில்
இப்படி நிறைந்து இருக்கிறது அது
எப்போதும் எங்கேயும் வசீகரிக்கிறாய் ...

உன் கண்ணில் நிறைந்து வழியும்
அந்த குறும்பு
உன் இதழில் இறங்கி
புன்னகையாய் சிரிக்கும்போது
நான் சிறைபட்டு போகின்றேன்...

தூக்கத்தில் இருந்த என்னை
எழுப்பி உட்கார வைத்து
சிரித்து சிதறடிக்கிறாய்
என் கனவில்...

ஒவ்வொரு முறை
நீ சிரிக்கும்போதும்
உன் கன்னத்தில்
சிவந்து எழும் அந்த மேடுகளிலும்
விழும் அந்த சின்னக் குழிகளிலும்
நான் தடுமாறி விழுகின்றேன்..

நீ எங்கிருந்தாலும்
உன் புன்னகையை நினைக்கையில்
என் முகம்
தானாய் மலர்கிறது
ஒரு புன்னகையாய்...

உன்னில் பொங்கும்
அந்த வெள்ளை புன்னகையில்
என்னை மறந்து போவதும்
சுகமாய் இருக்கிறது...


Monday 19 December 2011

உன் தரிசனம் வேண்டி


என் விழியோரம்
உன் உருவம் நிறுத்தி
நீ வரும் வழியெங்கும்
உனக்காக காத்திருக்கிறேன்...

நீ அங்கு
இல்லையென்று அறிந்தும்
உன் வீதியில்
நான் உலவிக் கொண்டிருக்கிறேன்
உன் தரிசனம் வேண்டி...

எங்கெல்லாம் நீ நின்றாயோ
அங்கெல்லாம் பார்க்கின்றேன்
அதே புன்னகையோடு
என்னை பார்த்து சிரிக்கின்றாய்
காற்றோடு கரைந்தும் போகிறாய்...

என் இரவுகளின்
நீளங்களை
உன் வரவால் நிரப்பியவள்
நீ வரமாட்டாய்
என் தெரிந்தும்
இந்த மனம்
என்னை விழித்திருக்க சொல்கிறது
அந்த நட்சத்திரங்களிடம்
உன் நலன் விசாரித்துக் கொண்டிருக்கின்றேன்...

என் கனவுகள்
உன் நினைவுகளால்
கனத்து போகின்றன
நீ சூடும்
ஜாதி மல்லியின் வாசம் மட்டும்
எனக்கு துணையாய் இருக்கிறது...



Thursday 15 December 2011

என்னோடு இருந்துவிடு


ஏன் வந்தாய்
என்னையும் கேட்கிறேன்
உன்னையும் கேட்கிறேன்
தெரியவில்லை எனறு சொல்லி
ஒரு புன்னகை பூக்கிறாய்
ஆயிரம் அர்த்தங்கள்
சொன்னாலும்
அதில் எல்லாம் இல்லாத
ஏதோ ஒன்று
மர்மமாய் உன் புன்னகையில்...

என்னை விட்டு போவாயோ
ஒவ்வொருமுறை இதை நீ கேட்கையிலும்
உன்னை நான் அதிகம் நெருங்குகிறேன்
உன் கண்ணில் தெரியும்
அந்த பயம் போக்க
வழி அறியாமல் விழிக்கின்றேன்...

உன் முத்தங்கள்
ஒவ்வொன்றும்
இன்றும்
இனித்துக் கொண்டுதான் இருக்கின்றன
உன் அணைப்பு அனைத்தும்
என்னை அரவணைத்துக்கொண்டேதான் இருக்கின்றன...

உன்னை நீக்கி
என்னையும்
என் நினைவுகளையும்
என் நிமிடங்களையும்
தனித்தெடுக்க முடியவில்லை
நானும் முயலவில்லை
இயைந்து
கலந்து
ஒன்றாகிப் போயிருக்கிறாய்...

உன் தாபங்களும் கோபங்களும்
உன் கெஞ்சல்களும் கொஞ்சல்களும்
மாறி மாறி
உன் நேசம் சொல்லும்
அதில் உன்னோடு நானும் மூழ்கி
நெகிழ்ந்து போகின்றேன்...

எதையும் யோசிக்காதே
என்னோடு இருந்துவிடு...

Wednesday 23 November 2011

மணலின் மடியில்


என் காதலியே
என்னவளே
எங்கே இருக்கின்றாய்
என்னுள்ளே
பத்திரமாகத்தானே இருக்கின்றாய்...

வாயேன்
கை கோர்த்து
ஒரு நடை போட்டுவிட்டு வருவோம்
தோள்கள் முத்தமிட்டுக்கொள்ள
காற்றுக்கு வலிக்காமல்
அதனூடே புகுந்து
மெல்ல மெல்ல
அந்த கடற்கரையோரம்
கதை பேசி
நடந்துவிட்டு வருவோம்...

மணலின் மடியில் அமர்ந்து
அலை ரசிப்போம்
அந்த அலை வழியே
நம் எண்ணங்கள்
கைகோர்த்து
சுற்றி வரட்டும்
இந்த உலகம் முழுதும்
அதுவரை
இந்த மனங்கள்
மௌனம் பேசி
மகிழ்ந்திருக்கட்டும்
என் கைகளில்
உன்னவை
அமைதியாய் பாதுகாப்பாய்
உன் தலை
என் தோளோடு
இது ஒரு மோன நிலை
வார்த்தைகள் இல்லை
உணர்கிறோம்...

Saturday 19 November 2011

எல்லாம் சரியாகிடும்


வார்த்தைகளில்
வலியை சொல்லுகிறேன்
இறக்கியும் வைக்க முடியுமா
வலியைவிட கொடுமையாய்
அதன் வார்த்தைகள்
தொண்டையில் சிக்கிக்கொண்டு
குத்துகின்றன...

உன்னை விட்டுச் செல்கிறேன்
என்று சொல்லும் வரை
உன்னை நான்
அத்தனை நேசிப்பதாய்
எனக்கே தெரியாது
உனக்கு தெரிந்திருக்குமோ...

என்னுள்ளேயே
இத்தனை வலியென்றால்
உன்னுள்ளே
கண்டிப்பாய் அழுதிருப்பாய்
உன் தலை கோதி
ஒரு முத்தமிட்டு
எல்லாம் சரியாகிடும்
கவலைப்படாதே
என்று
நம்பிக்கை வார்த்தைகளை
ஆறுதலாய் சொல்லி
தோள் தரத்தான் ஆசை...

சரியாக வேண்டியது
நான் என்பதால்
மனதுக்குள் மட்டும்
மறுகுகிறேன்...