Monday 31 October 2011

நீதான் கோலோச்சுகிறாய்


வாழ்வின் விளிம்பில்
நின்று கொண்டு
என்னையே நான்
தேடிக்கொண்டிருந்த நேரமது
என்னை எனக்கே
தேடித் தந்த
அந்த பலரில்
நீயும் ஒருத்தி
அதோடு நின்றுவிடவில்லை...

உள்ளே தள்ளிவிட்டனர்
வரமா சாபமா
தெரியவில்லை
ஆனால்
மீண்டும் வாழ்கிறேன்
நீயும் அங்கு இருப்பதனால்...

நீ யார் எனக்கு
என நீயும்
நான் யார் உனக்கு
என நானும்
கேட்டுக் கொண்டேயிருக்கின்றோம்
காதல் என்ற
கட்டத்துக்குள் கட்டுப்படுத்தி
அழகு பார்க்க விரும்பவில்லை –
அதுவும் இருக்கிறது...

நியதிகளுக்குள்
நியாயப் படுத்த முடியாமல் போனாலும்
எனக்கு நானே
எழுதிக் கொண்ட கோட்பாடுகளில்
நீதான் கோலோச்சுகிறாய்

என்னுள் உன்னையும்
உன்னுள் என்னையும்
தேடித் தேடியே
தொலைந்து போகின்றோம்
என்னில் நீயும்
உன்னில் நானும்
தெளிவு காண்கின்றோம்

உருவமில்லா உறவென்றாலும்
உறவு இருக்கிறது
அது நிலைக்கும்
நீயும் நானும்
நாமும்
இருக்கும்வரை

Saturday 29 October 2011

என்னவோ செய்கிறாய்

என்னவோ செய்கிறாய்
ஏதேதோ ஆகிறேன்
என்னுள்ளே விழுந்து
எல்லாமுமாய் கலந்து...

உன் தீண்டல் சுகம் தெரியாது
இருந்தும்
ஏங்கித்தான் போகின்றன
என் அத்தனை அணுக்களும்...

வா வந்து
எனை ஏந்திக்கொள்
முழுவதுமாய் படர்ந்துவிடு
என் மோகத்தை தின்றுவிடு
என்னுள்
காதலில் கலந்தவளே...

Tuesday 11 October 2011

ஆலமர விழுதுகளாய்


என் மனதில் விழுந்த
உன் ஒற்றை நினைவு
என் எல்லா அணுக்களிலும்
ஆழமாய் வேர்விட்டு
அழகாய் வளர்ந்து நிற்கிறது...

ஆலமர விழுதுகளாய்
உன் கைகள்
என்னை இழுத்து
இறுக்க அணைத்து
உன்னை பிளந்து
என்னை உனக்குள்
புதைத்து கொள்கிறது...

ஆக்டோபஸ் கரங்களாய்
எட்டுதிக்கும் என்னை சூழ்ந்த
உன் நினைவுகள்
என்னை வாரி சுருட்டி
தன்னுள் விழுங்குகிறது...

எனது
அத்தனை எண்ணக் கிளைகளிலும்
ஏதோ ஒரு நுனியில்
வெவ்வேறு வண்ணத்தில்
வண்ணத்துப் பூச்சிகள்
படபடத்துக் கொண்டிருக்கின்றன
உனது நினைவாக...

தேங்கி நிற்கும் நீரில்
நான் எட்டி பார்க்கையில்
உன் முகம் மட்டுமே தெரிவதில்
விந்தையேதுமில்லை...
ஓடுகின்ற நீரில்
உனது புன்னகை ஓவியம
ஆச்சர்யம்....

Saturday 1 October 2011

விடை தெரியாத கேள்விகளோடு


திரும்பிப் பார்த்து
சிரிக்க முயன்று தோற்று போகும்
அந்த உனது பார்வை
என்னை கலங்க அடிக்கிறது
கை தூக்கி
நீ காட்டும்
அந்த சைகை
வந்து அள்ளிக் கொள்
என்பது போலவே இருக்கிறது...

திரும்ப வந்துவிடு
நான் ஏந்திக் கொள்கின்றேன்
என்று உரக்க
கத்த வேண்டும் போல் இருக்கிறது...

எத்தனைதான் சமாதானம் சொன்னாலும்
இந்த மனம் கேட்க மறுக்கிறது
இது பிரிவுதான் என்பதை
சொல்லிக் கொண்டே இருக்கிறது...

ஏனோ தெரியவில்லை
பயமாய் இருக்கிறது
நீ சொன்ன இந்த வார்த்தைகளில்
உன் கலக்கம் தெரிந்தது
செயலற்றுபோய்
செய்வதறியாமல் நானும்...

என் கைகளை
நீ பற்றிய
இருக்கத்தில்
ஆயிரமாயிரம் வார்த்தைகள்
நீ சொல்லமுடியாத கண்ணீர்
உன் உள்ளங்கையின்
ஈரத்தில்...

ஒரு அணைப்பாலும்
நேசத்தின் முத்தத்தாலும்
நான் இருக்கிறேன்
என்று
சொல்லத்தான் விழைகின்றேன்
முடியவில்லை
சந்தர்ப்பமும் அனுமதிக்கவில்லை...

முற்றுப் பெறாத
உனது வார்த்தைகளும்
கண்களில்
தெரியும் கேள்விகளும்
பிரிவின் வலியை
மீண்டும் உணர்த்துகின்றன
எத்தனை முறை ஆனாலும்
புதிதாக
அதே வீரியத்தோடு
பழக்கத்திற்கே
வர மறுக்கிறது
பிரிவின் வலி மட்டும்...

எல்லாம் புரிந்தும்
ஏதும் முடியாமல்
காலத்தின் கட்டாயத்தில்
உன்னை மட்டும் தனியாக
உனது நம்பிக்கையோடு
உனது நாளைக்குள்
வழி அனுப்பிவிட்டு
எனது நாளைக்காக
காத்திருக்கிறேன்
விடை தெரியாத
கேள்விகளோடு