Wednesday 23 November 2011

மணலின் மடியில்


என் காதலியே
என்னவளே
எங்கே இருக்கின்றாய்
என்னுள்ளே
பத்திரமாகத்தானே இருக்கின்றாய்...

வாயேன்
கை கோர்த்து
ஒரு நடை போட்டுவிட்டு வருவோம்
தோள்கள் முத்தமிட்டுக்கொள்ள
காற்றுக்கு வலிக்காமல்
அதனூடே புகுந்து
மெல்ல மெல்ல
அந்த கடற்கரையோரம்
கதை பேசி
நடந்துவிட்டு வருவோம்...

மணலின் மடியில் அமர்ந்து
அலை ரசிப்போம்
அந்த அலை வழியே
நம் எண்ணங்கள்
கைகோர்த்து
சுற்றி வரட்டும்
இந்த உலகம் முழுதும்
அதுவரை
இந்த மனங்கள்
மௌனம் பேசி
மகிழ்ந்திருக்கட்டும்
என் கைகளில்
உன்னவை
அமைதியாய் பாதுகாப்பாய்
உன் தலை
என் தோளோடு
இது ஒரு மோன நிலை
வார்த்தைகள் இல்லை
உணர்கிறோம்...

Saturday 19 November 2011

எல்லாம் சரியாகிடும்


வார்த்தைகளில்
வலியை சொல்லுகிறேன்
இறக்கியும் வைக்க முடியுமா
வலியைவிட கொடுமையாய்
அதன் வார்த்தைகள்
தொண்டையில் சிக்கிக்கொண்டு
குத்துகின்றன...

உன்னை விட்டுச் செல்கிறேன்
என்று சொல்லும் வரை
உன்னை நான்
அத்தனை நேசிப்பதாய்
எனக்கே தெரியாது
உனக்கு தெரிந்திருக்குமோ...

என்னுள்ளேயே
இத்தனை வலியென்றால்
உன்னுள்ளே
கண்டிப்பாய் அழுதிருப்பாய்
உன் தலை கோதி
ஒரு முத்தமிட்டு
எல்லாம் சரியாகிடும்
கவலைப்படாதே
என்று
நம்பிக்கை வார்த்தைகளை
ஆறுதலாய் சொல்லி
தோள் தரத்தான் ஆசை...

சரியாக வேண்டியது
நான் என்பதால்
மனதுக்குள் மட்டும்
மறுகுகிறேன்...

Thursday 10 November 2011

காத்திருக்கிறோம்...


தென்றலின் தாலாட்டில்
நடனமாடும்
மூங்கில் இலைகளுக்கு பின்னால்
அழகியவள்
கண்கள் மட்டும் எட்டிப் பார்க்கின்றன...

அவள் இமை திறக்க
இந்த இளம்காலை
காத்திருக்கிறது நகராமல்...

புல்லின் நுனியில்
விழாமல் காத்திருக்கும் பனித்துளியும்
கரைந்து காணாமல் போகும்முன்
மூடு பனியும்
அவள் பார்வையில் நனைந்திடவே
காத்திருக்கின்றன...

நிலைகொண்ட காற்றுகூட
அவளை தீண்டிவிட்டே
வீசுவேன் என்று காத்திருக்கிறது...

பூக்கள் அனைத்தும் மொட்டுக்களாகவே
அவள் வருகையை
இதழ் விரித்து
வாசம் வீசி
வரவேற்க காத்திருக்கின்றன...

இவைகளுடன்
நானும் அவளுக்காக
இமை தாங்கி
இதயம் விரித்து
காத்திருக்கிறேன்
வருவாளா என்னுளே...

Tuesday 8 November 2011

கருப்பு வெள்ளை தேவதை


கருமை உருவில்
வெள்ளை உடையில்
தேவதையாக
அதோ அவள்
திரும்பிப் பார்த்து
ஒரு மோகனப் புன்னகையாலே
என்னை வா என்கிறாள்
ஒளியென
ஒரு வழித்தடம்
எனக்காக
பதித்து போகிறாள்...

அதோ என்னவள்
சூரியனால் கூட முடியவில்லை
மறைக்க முயன்ற மேகத்தை கிழித்து
ஒற்றை கீற்றாய்  
எட்டிப் பார்க்கின்றான்
பச்சை நிற
மரங்கள் எல்லாம்
அவளை காணவோ
அத்தனை கோடி நிறங்களையும்
தன்மேல்
வாரி இறைத்துக் கொண்டன...

இலையுதிர்கால
இலைகளும் மரங்களும்
கட்டிய
பல வண்ணக் கோட்டையில்
மறுக் கோடியில்
சூரியன்
ஒளிரச் வைத்த தேவலோகத்தில்
என் தேவதை
கருப்பு வெள்ளையில்
என்னை பார்த்து சிரிக்கிறாள்
ஒளிர்கிறாள்...