தென்றலின் தாலாட்டில்
நடனமாடும்
மூங்கில் இலைகளுக்கு பின்னால்
அழகியவள்
கண்கள் மட்டும் எட்டிப் பார்க்கின்றன...
அவள் இமை திறக்க
இந்த இளம்காலை
காத்திருக்கிறது நகராமல்...
புல்லின் நுனியில்
விழாமல் காத்திருக்கும் பனித்துளியும்
கரைந்து காணாமல் போகும்முன்
மூடு பனியும்
அவள் பார்வையில் நனைந்திடவே
காத்திருக்கின்றன...
நிலைகொண்ட காற்றுகூட
அவளை தீண்டிவிட்டே
வீசுவேன் என்று காத்திருக்கிறது...
பூக்கள் அனைத்தும் மொட்டுக்களாகவே
அவள் வருகையை
இதழ் விரித்து
வாசம் வீசி
வரவேற்க காத்திருக்கின்றன...
இவைகளுடன்
நானும் அவளுக்காக
இமை தாங்கி
இதயம் விரித்து
காத்திருக்கிறேன்
வருவாளா என்னுளே...
1 comment:
நிச்சயம் வருவாங்க ...
அதற்கும் , கவிதைக்கும் வாழ்த்துக்கள்
Post a Comment