Friday 30 September 2011

முத்தங்கள்


முத்தங்கள் என்ற முத்துக்கள்
என்னுள்ளும் விழுந்தன
கேட்காமலேயே கிடைத்தன சில
எதிர்பாரா தருணங்களில்
என்னை மறக்கச் செய்தன சில
வேண்டிப் பெற்றவை சில
நெகிழ வைத்தவை சில
இனிமையாய்
எப்போதும் எனக்கான நினைவுகளில்
வீற்றிருப்பவை சில
முகர்ந்து பார்க்கின்றேன்

எத்தனை முறை
பின்நோக்கி பார்த்தாலும்
இதுவே
என்னுள் நிலைத்த
முதல் முத்தம்
ஏனோ தெரியவில்லை
இந்த முத்தத்தின் நினைவோடு
ஒவ்வெரு முறையும்
ஒரு பனித்துளி ரோஜா
வந்து ஒட்டிக்கொள்கிறது
தெருமுனையில் உன்னை பார்த்து
நானும் ஓடி வர
நீயும் ஓடி வந்து
அள்ளி அணைத்து
கொடுத்த பிள்ளை முத்தம்
மாறி மாறி
இரண்டு கன்னங்களும்
எத்தனை என்று
கணக்கு வைத்து கொள்ளவில்லை
தீக்கு
உன்னை நீ இரையாக
தந்த பின்னர்
என்னுள் உன்னை
சுமந்து நிற்க்கும்
இறுதி நினைவு இது

இன்றுதானா இறுதி நாள்
பிரிவு உண்மைதானா
நீ போய்தான் ஆகவேண்டுமா
சிலையாய நான் நாற்காலியில்
உலகம் புரியாத வயது
உண்மையை மறுதலிக்கும் பருவம்
எனக்கும் உனக்கும் மட்டுமே தெரியும்
இந்த உறவின் புனிதம்
நாளை எதிர்கொள்ளும் திராணியற்று
நாற்காலிக்கு பாரமாய்
இன்றும் அந்த காட்சி
நிஜமாக என்னுள்
என் அருகில் வந்து
தலைகோதி
என் கையெடுத்து
உன்னுள் அழுத்தி
என் கையில் கொடுத்த
அந்த ஈர முத்தம்
இப்போதும்
தடவிப் பார்க்கின்றேன்
அந்த ஈரத்தின் கதகதப்பை
வேறு யாரும்
அங்கே முத்தமிடாமல்
காத்தும் வருகின்றேன்

அதுவரை கிட்டாத ஒரு சுகம்
உனக்காகவே
காத்து கிடந்த தவம்
முத்தத்திலேயே முடிந்த இரவு
உன் மோகத்திலே
நான் திளைத்திருக்க
நீ
என் இதழ் தின்ற சுகம்
நீ தந்த முதல் முத்தம்
எத்தனை தந்தாலும்
முதலின் சுகம்
மீண்டும் கிட்டுவதில்லை
அது போல்
இது இல்லை
என நீயும் பிதற்றுகிறாய்
நானும் கேட்கின்றேன்

உன்னிடம்தான்
உன் முதல் முத்தத்திற்குதான்
எத்தனை கெஞ்சல் கொஞ்சல்
அத்தனை பேருக்கும் கொடுக்கின்றாய்
எனக்கு மட்டும்
கள்ளச் சிரிப்பால்
இல்லை என்பாய்
உன் மனமும்
இளகியது போலும்
அப்பன் பாவ்மென்று
அமுத முத்தமொன்றை
அழுந்தத் தந்தாய்
என் கன்னத்தில்
முத்தமிடும்
இரண்டாவது ரோஜா நீ
இன்னமும் தொடர்கிறது
அந்த கெஞ்சல்
ஒவ்வொரு முறை
உன் முத்தம் வேண்டும் போதும்

அத்தனையும் இழந்தேன்
முதல் முறை
என் நம்பிக்கை
என்னை அசைத்து பார்த்தது
ஒரு தோள் தேடியது
தனிமை
தன் கொடூர முகம் காட்டியது
அத்தனை வேதனையையும்
தன்னுள் மறைத்து
அருகில் வந்து
தலை கோதி
முன்நெற்றியில்
ஒரு அமுத முத்தம்
என்னை பெற்றவனே
நான் உடைந்து போனேன்
மீண்டு எழுந்தேன்
இன்றும் நிற்கின்றேன்
உன்
அந்த ஒரு முத்தத்தால்

காற்றோடு கதை பேசிக்கொண்டு
அலைகளோடு அளவளாவிக்கொண்டு
நம் இதயங்கள்
காதல் சொல்லிக் கொண்டிருந்தன
முன்னிரவு மயக்கம்
பல தயக்கங்களை
தகர்த்துக் கொண்டிருந்தது
உன்னை பார்க்கமலேயே
உன் குறும்பு பார்வையை
ரசித்து கொண்டிருதேன்
சற்றும் எதிர்பாராமல்
சட்டென ஒரு முத்தம்
என் கன்னத்தில்
அத்தனை வேகம்
கொடுத்த போது உணரவில்லை
முடித்த பின் நான் மீளவில்லை
உனக்கான என் முத்தத்தை
நீ கேட்கும்வரை...
அதற்கு பின்னும்
நான் அவனாகவில்லை


1 comment:

Post a Comment