Thursday 8 September 2011

மௌனத்தின் வழியே


மௌனத்தின் வழியே
நீயும் நானும்
உரையாடிக் கொண்டிருப்பது தெரியாமல்
வார்த்தைகள் வருத்தப்படுகின்றன

நீ என்னுள் எரியவிட்ட மோகத்தீ
உனது ஒரு அணைப்பு
உனது ஒரு முத்தம்
இதையும் தாண்டி எதையோ தேடுகிறதே...

ன் வளைவுகளின் நெளிவுகளில்
உன்னை தொலைத்தாயோ
ன் கன்னக் குழிகளில்
தேடிக் கொண்டிருக்கிறாய்
உன் முத்தங்களால்...

முழுவதுமாய்
என்னை உன்னுள் தொலைத்துவிட விழைகின்றேன்...
நான் என்பதே இல்லாமல்
எல்லாமே நீயாகிப் போகின்றேன்...

என்ன செய்கிறாய் என்னை...
மூடிய கண்களை திறக்க மனமில்லாமல்...
உன் ஒவ்வொரு தீண்டலுக்கும்
என்னை இழக்கின்றேன்...

சிலிர்க்க வைக்கும்
உன் நுனி விரல் தீண்டலுக்காகவே
ஏங்கிப் போய் கிடக்கின்றன
என் உள்ளங் கால்களும்
காது மடல்களும்
மெல்லிய முலைகளும்...

எங்கெங்கோ
என்னை இட்டுச் செல்லும்
இந்த தருணம்
இன்பத்தின் விளிம்பிற்கு
இழுத்துச் சென்று
என்னை உறையச் செய்கிறது...

உன் கைகளுக்குள் சிறைபட்டு
உன் தேக சூட்டின் கதகதப்பில்
என்னை மறந்து
மயங்கிப் போகின்றேன்...

கடந்த காலமும்
நிகழ்காலமும் சந்திக்கும்
உன்னோடு நான் இருக்கும்
இந்த வினாடியை தேக்கி
என் வாழ்வின் மிச்சங்களை
அதில் திளைத்திட வேண்டும்...

உன் இதழின் ஓரத்தில்
வழிந்தோடும் கள்ளச்சிரிப்பில்
என்னை சிறைபிடித்து
மீட்டுத் தருகிறேன் என்று
முத்தத்தால்
முழுவதுமாய் தின்று போகின்றாய்...

என் செல்லச் சினுங்கள்களும்
உன் முத்தச் சத்தங்களும்
போட்டி போட்டுக் கொண்டு
இரவின் நிசப்தத்தை கலைக்கின்றன...

1 comment:

அ.முத்து பிரகாஷ் said...

இவ்வாறே பெண்கள் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள் ஆண்கள்.

மற்றபடி,

தங்களின் மொழியின் தேர்ச்சி என்னை வியப்படைய வைக்கிறது தோழர்!

அசூர வளர்ச்சி!!

Post a Comment