Tuesday 14 August 2012

இனிதான் பயணம்


பேருந்து நிறுத்த இருட்டில்
அவள் நிழலாக நின்றிருந்தாள்
தூவாணம் லேசாக தூறிக் கொண்டிருந்தது
சோடியம் தெருவிளக்கு
மங்கலாய் ஒளிர்ந்துகொண்டிருந்தது...

வெளிச்சம்
மழைத் துளியில் சிதறி
அவள் முகத்தில் ஒளிர்ந்த
கண்சிமிட்டும் அந்த வினாடிகளில்
அவள் அழகு என்னை கொள்ளை கொண்டது...

மயங்கி இருந்த என்னை மறந்துவிட்டு
ஏதோ ஒரு ஒளிச்சிமிட்டலின் இடையே
அவள் மறைந்துவிட்டாள்...

நான் காத்திருக்க ஆரம்பித்தேன்
ஒரு நாள் இரண்டு நாள்
மோகம் என நினைத்திருந்தேன்
மூன்று நாள் நான்கு நாள்
இல்லையென உணர்ந்தேன்
என் காத்திருத்தல் தொடர்ந்தது
அதே நேரம்
அதே இருட்டான பேருந்து நிறுத்தம்
வாரங்களும் மாதங்களும் மட்டும் ஓடிக்கொண்டிருந்தன...

எல்லாமே எனக்கு பழக்கமாகிவிட்டன
வேர்கடலை விற்கும் தாத்தா
பூ விற்கும் அந்த இளம் விதவை
டீ கடை சிறுவன் உறவேயாகிவிட்டான்
அந்த பார்வையற்றவர்
சாலை கடக்க இப்போதெல்லாம்
எனக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்...

இது கண்டிப்பாக மோகமில்லை
ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட முடிச்சு
அவள் வராது போனாலும்
இந்த காத்திருத்தல் சுகமானதாகவே இருக்கிறது...

அது ஒரு மழை நாள்
கருமேகம்
வெளிச்சத்தை அவசரமாய் தின்றுகொண்டிருந்தது
அதோ பேருந்து நிறுத்தத்தின்
அந்த இருட்டு மூளையில்
திடீரென்று மின்னல் ஒளி
தேவதையாய் அவள் இறங்கி வந்தாளோ
அந்த ஒரு வினாடியே ஆனாலும்
அவள் என்னை பார்த்ததும்
மின்னலாய் சிரித்ததும்
என்னுள் பாய்ந்தது
பேருந்து ஒன்று
என்மேல் பொறாமை பட்டு வந்தது
விடுவேனா நானும்
தொற்றிக் கொண்டேன்...

இனிதான் பயணம்...

No comments:

Post a Comment