Wednesday 30 May 2012

கனவுப் பக்கங்கள்


உனக்கான எனது கனவுகளை
எடுத்து வைத்துக் கொண்டு
ஒவ்வொரு பக்கமாய்
வலிக்காமல் புரட்டிக் கொண்டிருக்கிறேன்...

கருப்பு வெள்ளையில்
விரியும் காட்சிகள் அனைத்தும்
நீ இருப்பதால்
வண்ணங்களை
வாரி இறைத்துக் கொள்கின்றன...

வெள்ளை தேவதைகளுக்கு நடுவே
நீ மட்டும் அழகாய்
அதுவரை வெறிச்சோடியிருந்த
என் வானவீதியில்
தேவதைகள மன்னிப்பார்களாக...

முடிவுகளே இல்லாத சாலைகளில்
நீயும் நானும் மட்டும்
மௌனங்களில் பேசிக்கொண்டு
விரல்களில் சிக்கிக்கொண்டு...

கண்முன் விரியும்
என் தோட்டம் முழுதும்
பலவண்ண மலர்கள்
கையளவு
உன்மீது வீசுகின்றேன்
அத்தனையும் மலர்ந்து
உன்னை சூடிக்கொள்கின்றன...

உறைய வைக்கும் பனியில்
என் இடைசூடிக் கொண்டு நீ
எதிரில்
மெல்லத் திரை விலகுகிறது
வசந்தம்
ஆயிரமாயிரம் வண்ணங்களில்
மலர்கிறது...

வானத்தோடு முத்தமிட்ட
கடல் அதன் முன்
எல்லையில்லா மணல்
ஒரே புள்ளியாக நாம்
விளையாடிக் கொண்டிருந்த அலைக்கு
ஏதோ ஆசை வந்து
உள்ளே இழுத்துச் சென்றாள்
ஆழத்தில் கட்டி வைத்த கூட்டுக்குள்
இட்டுப் போனாள்
முத்தமிட்டுக் கொள்ளும் மீன்களுக்கு நடுவே...

நிலவின் நிழலில்
புன்னகையில் நீயும்
கைகட்டிக்கொண்டு நானும்
மோகன ஆராதனை
தலை கோதும் கைகளும்
முத்தம் தேடும் இதழ்களும்
முடிவில்லா ஆரம்பம்...

கலைந்து விழிக்கையில் எல்லாம்
பக்கத்திலேயே நீ
காயாத முத்தங்களும்
மாறாத வாசமும்
என்னுடனேயே பயனிக்கின்றன...

No comments:

Post a Comment